தொழில்அதிபரை மிரட்டி ரூ.5 லட்சம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி இடைநீக்கம்
பெங்களூருவில் தொழில்அதிபரை மிரட்டி ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
ரூ.5 லட்சம் லஞ்சம்
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே வசித்து வருபவர் சுதீப், தொழில்அதிபர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசார் 4 பேர், சுதீப் வீட்டுக்கு சென்று வழக்கு ஒன்று குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் அவரை, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக ஸ்வேதா சிங் என்பவர் புகார் கொடுத்திருப்பதாக கூறியுள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யாமலும், உங்களை கைது செய்யாமல் இருக்கவும் பணம் கொடுக்கும்படி சுதீப்பை, 4 போலீசாரும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பணம் கொடுப்பதாக அவரும் சம்மதித்துள்ளார். உடனே ரூ.10 லட்சம் கொடுக்கும்படி கேட்டதாக தெரிகிறது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய சுதீப், ரூ.5 லட்சத்தை போலீசாரிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகும், பணம் கொடுக்கும்படி கேட்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
போலீசார் மீது வழக்கு
இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து 4 போலீசார் மீது ஊழல் தடுப்பு படை போலீஸ் நிலையத்தில் சுதீப் புகார் அளித்தார். அதில், ஒயிட்பீல்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் நவீன், கணேஷ், ஏட்டு ஹேமந்த் ஆகிய 4 பேரும் தன்னை மிரட்டி ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி இருந்தார்.
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகா உள்பட 4 போலீசார் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பணி இடைநீக்கம்
இந்த விசாரணையின் போது தொழில் அதிபர் சுதீப்பை மிரட்டி இன்ஸ்பெக்டர் ரேணுகா உள்பட 4 போலீசாரும், ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை, கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட்டிடம், ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் வழங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ரேணுகா, சப்-இன்ஸ்பெக்டர்களான நவீன், கணேஷ், ஏட்டுவான ஹேமந்த் ஆகிய 4 போலீசாரையும் பணி இடைநீக்கம் செய்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் 4 பேர் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசில் பதிவான வழக்கை தொடர்ந்து விசாரிக்கவும், அவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.