சொத்து பிரச்சினையில் மகனை கொன்ற முதியவர் கைது
ராய்ச்சூர் அருகே சொத்து பிரச்சினையில் மகனை கொன்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
தந்தை-மகன் தகராறு
ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் அருகே துர்மிகாலா கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தப்பா (வயது 65). இவருக்கு 2 மனைவிகள்.2-வது மனைவியின் மகன் பீமப்பா (20). தொழிலாளியான அனுமந்தப்பாவுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதையடுத்து, தனக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்ய அனுமந்தப்பா முடிவு செய்தார். இதற்காக சிலரை சந்தித்து வீட்டை விற்பனை செய்வது குறித்து அவர் பேசி வந்துள்ளார்.
ஆனால் அந்த வீட்டை விற்பனை செய்வதும் மற்றும் சொத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக அனுமந்தப்பாவுக்கும், அவரது மகன் பீமப்பாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி, நேற்று காலையிலும் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது.
தண்ணீருக்குள் அமுக்கி கொலை
பின்னர் தனது மகனை கிராமத்தில் உள்ள கால்வாய்க்கு அனுமந்தப்பா அழைத்து சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மகன் பீமப்பாவுக்கு நீச்சல் தெரியாது என்பதால், அவரை கால்வாய்க்குள் பிடித்து அனுமந்தப்பா தளளியதாக தெரிகிறது. பின்னர் தண்ணீருக்கு அமுக்கி பீமப்பாவை அனுமந்தப்பா கொலை செய்ததாக கூறப்படுகிறது. தனது மகன் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டதாக போலீசாரிடம் அனுமந்தப்பா நாடகமானார்.
ஆனால் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது மகனை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்ததாகவும், சொத்து பிரச்சினை மற்றும் வீட்டை விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சிந்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமந்தப்பாவை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சிந்தனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.