9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
ஆலங்குளம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆசிரியர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த சோலைசேரியைச் சேர்ந்தவர் இலங்காமணி (வயது 36). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று வைக்கோல் எடுப்பதற்காக சென்றபோது, ஒரு வீட்டில் தனியாக இருந்த 14 வயதான 9-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார்.
போக்சோ சட்டத்தில் கைது
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, ஆசிரியர் இலங்காமணியை கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்து ஊத்துமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இலங்காமணியை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.