வில்லியனூர் அருகே ரவுடி கும்பல் மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு

வில்லியனூர் அருகே ரவுடி கும்பல் மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-30 18:36 GMT
வில்லியனூர், ஜூலை.31-
வில்லியனூர் அருகே ரவுடி கும்பல் மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ரவுடிகள் மோதல்
வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் முருகன், ரவுடி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தடி அய்யனாருக்கும் முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு முருகன் தனது நண்பர்கள் அய்யப்பன், மணிகண்டன் ஆகியோருடன் தனது வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். 
சரமாரி அரிவாள் வெட்டு
அப்போது மோட்டார் சைக்கிளில் தடி அய்யனார், நண்பருடன் வந்தார். அவர்கள் முருகனிடம் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தடி அய்யனார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகன் மற்றும் அவரது நண்பர்களை நோக்கி சரமாரியாக வெட்டினர். 
இதில் அவர்கள் 3 பேருக்கும் தலை, முகம், கை என சரமாரியாக வெட்டு விழுந்தது. இவர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதை பார்த்த தடி அய்யனார், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார்.
2 பேருக்கு வலைவீச்சு
வெட்டுக்காயம் அடைந்த முருகன், அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் வில்லியனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த மோதல் பற்றி தகவல் அறிந்தவுடன் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தடி அய்யனார் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ரவுடி கும்பல் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்