ஆடிமாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-07-30 17:37 GMT
தர்மபுரி:

சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் கந்தர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், உழவர்தெரு மாரியம்மன் கோவில், செல்லியம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், நெசவாளர் நகர் ஓம்சக்தி மாரியம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மாரியம்மன் கோவில், குப்பா கவுண்டர் தெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
புத்து கோவில்
தர்மபுரி இலக்கியம்பட்டியில் உள்ள புத்துகோவிலில் ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பாம்பு புற்றுக்கு முட்டை வைத்தும் பால் ஊற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. காரிமங்கலத்தில் அடுத்த கெரகோடஅள்ளியில் தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அஷ்ட வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதேபோன்று பென்னாகரம், பாலக்கோடு, அரூர், மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, ஏரியூர், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, கடத்தூர், மொரப்பூர், பொம்மிடி, கம்பைநல்லூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், பூவாடைக்காரி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்