குடியாத்தம் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைப்பு
முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைப்பு
வேலூர்
குடியாத்தம் நகர், சந்தப்பேட்டையில் இயங்கி வந்த ஒரு ஜூவல்லரி நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்தனர். அந்த பணத்தை நிறுவனத்தினர் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இதையடுத்து அந்த நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் இடை முடக்கம் செய்யப்பட்டது.
முதலீடு செய்திருந்த 226 பேருக்கு திருப்பி செலுத்த வேண்டிய ரூ.89 லட்சம் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.
அந்ததொகையில் ஏற்கனவே 155 முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.66 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று 14 முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய மொத்த அசல் தொகை ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 500-ஐ மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேற்று வழங்கினார். மீதமுள்ள 57 முதலீட்டாளர்களுக்கு உரிய ஆவணங்களை சரிபார்த்து அசல் தொகையினை விரைவில் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.