தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தலா ரூ.50 ஆயிரம்
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் தங்களது படிப்பை தொடர முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வருடமும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி பெறுவதற்கு பிளஸ்-2 கல்விச்சான்றிதழ், இருப்பிடச் சான்று, வருமான சான்று (குடும்ப தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்), அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றைச் சாளர முறை வழியாக சேர்க்கை பெற்ற ஒதுக்கீட்டு கடிதம் தேவை. நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் நிதி உதவித்தொகை பெற இயலாது.
தாலுகா அலுவலகத்தில்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் சான்று ஆகிய சான்றிதழ்களுடன் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பத்திடும் மாணவர்களின் மனுக்கள் மீது தல விசாரணை மேற்கொண்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு பரிந்துரை செய்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை பெற ஆவணம் செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.