சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடியில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Update: 2021-07-30 16:04 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

சுங்கத்துறை கண்காணிப்பாளர்

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 56). இவர் தூத்துக்குடியில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 25-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் நேற்று காலையில் தூத்துக்குடியில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் வெளிப்புற இரும்பு கதவு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாணசுந்தரத்தின் குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 70 பவுன் நகைகளும் கொள்ளை போனது தெரியவந்தது. பூஜை அறை, படுக்கை அறையில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் சேகரித்து பதிவு செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், கல்யாணசுந்தரத்தின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தனர். பின்னர் முன்பக்க கதவை கம்பியால் உடைத்து திறந்து நுழைந்த அவர்கள், அங்குள்ள பீரோக்களையும் உடைத்து திறந்து 70 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.21 லட்சம் ஆகும். கல்யாணசுந்தரத்தின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேகரிக்கும் ஹார்டு டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.

கூட்டுறவு சார்பதிவாளரின் வீட்டிலும் திருட்டு

இதேபோன்று தூத்துக்குடி என்.ஜி.ஓ. காலனி 3-வது தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு சார்பதிவாளரான கணபதி (85), கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கணபதி வீட்டின் கதவு, பீரோக்களை உடைத்து திறந்து, ரூ.2½ லட்சம் மற்றும் 2 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த  புகார்களின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடியில் சுங்கத்துறை அதிகாரி, ஓய்வுபெற்ற கூட்டுறவு சார்பதிவாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்