சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏரல்:
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.
ஆடி அமாவாசை திருவிழா
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு கோவில் வளாகத்தில் நேற்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கோவில் முன் மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிமரத்தில் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தபாண்டிய நாடார் கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். இரவு சப்பர பவனி நடந்தது.
கற்பக பொன் சப்பரம்
முன்னதாக நேற்று முன்தினம் சங்குமுக தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. விழா நாட்களில் தினமும் இரவில் கோவில் வளாகத்தில் பல்வேறு அலங்காரங்களில் சப்பரத்தில் சாமி எழுந்தருளும் காட்சி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி அமாவாசசை திருவிழா வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மதிருக்கோலக்காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
பச்சை சாத்தி தரிசனம்
9-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், விழாவின் நிறைவு நாளான 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடல் நடக்கிறது.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் சாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெறுகிறது.