விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு கொரோனா நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு கொரோனா நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-07-30 15:32 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றிய தலைவர் வீரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் வேலவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கொரோனா தடுப்பூசியை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் உற்பத்தி செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் ெரயில்வே துறையில் நிறுத்தப்பட்ட சலுகைகள் அனைத்தையும் உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு, பெண்களுக்கு முன்பதிவில்லா இலவச ரெயில் பெட்டியை இணைக்க வேண்டும்.

2 ஆண்டு காலமாக நிறுத்தப்பட்டுள்ள திருமண உதவித்தொகை திட்டத்தை பதிந்துள்ள பயனாளிகள் அனைவருக்கும் விடுபடாமல் உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் வேலையிழந்த விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மத்திய அரசு நிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஒன்றிய பொருளாளர் பார்த்திபன், ஒன்றிய துணை செயலாளர் கோபி, கிளை செயலாளர்கள் பாரதிமோகன், உதயகுமார், கிரேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்