நாகூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி - மேலும் ஒருவர் படுகாயம்
நாகூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நாகூர்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் கீழநளசேரி காலனிதெருவை சேர்ந்த சிவராமன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 20). இவரும் கொரடாச்சேரி மடப்புரம் மெயின் ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் வினோத் (28) என்பவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திருவாரூரில் இருந்து நாகூருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை வினோத் ஓட்டி சென்றார். நாகூரில் கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள ஒரு பெட்ரோல்விற்பனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மணிகண்டன், வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து.தகவல் அறிந்த நாகூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மணிகண்டனை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.