கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்
கர்நாடக மந்திரி சபையை விரிவாக்கம் செய்வது குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசுகிறார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக தனது பதவியை கடந்த 26-ந்தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் பதவி ஏற்றார். எடியூரப்பாவின் தீவிரமான ஆதரவாளரான அவர் நேற்று உத்தரகன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பிரதமர் நேரம் ஒதுக்கியதும் டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாக பதவி ஏற்றதும் பசவராஜ் பொம்மை கூறினார். பிரதமரை நேரில் சந்திக்க பசவராஜ் பொம்மைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
இன்று டெல்லி பயணம்
இந்த நிலையில் பசவராஜ் பொம்மை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசுகிறார்.
தன்னை முதல்-மந்திரியாக நியமனம் செய்ததற்காக அவர்களுக்கு பசவராஜ் பொம்மை நன்றி தெரிவிக்கிறார்.
மந்திரிசபை விரிவாக்கம்
அதன் பிறகு ஜே.பி.நட்டா, அமித்ஷா, கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோருடன் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க இருக்கிறார். முதல் கட்டமாக 25 மந்திரிகள் பதவி ஏற்க இருப்பதாகவும், அந்த 25 பேர்களின் பெயர் பட்டியலுக்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
கோவிந்த் கார்ஜோள், ஆர்.அசோக், ஸ்ரீராமுலு ஆகியோருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. எடியூரப்பா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த முருகேஷ் நிரானி, சுதாகர், பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், அஸ்வத் நாராயண், சி.பி.யோகேஷ்வர் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
15 பேருக்கு வாய்ப்பு கிடைக்காது
மேலும் எடியூரப்பா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த ஜெகதீஷ்ஷெட்டர், ஈசுவரப்பா, உமேஷ்கட்டி, எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், நாராயணகவுடா, பி.சி.பட்டீல், சிவராம் ஹெப்பார், சுரேஷ்குமார், ஸ்ரீமந்த் பட்டீல் உள்ளிட்ட 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. மந்திரி பதவியை
பெற பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக டெல்லி செல்ல தொடங்கியுள்ளனர்.
மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, ஆர்.அசோக் நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள் இன்று (வெள்ளிக்கிழமை) செல்ல இருக்கிறார்கள். மந்திரிசபையில் புதிய முகங்கள் அதிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க பா.ஜனதா மேலிடம் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியை பலப்படுத்தி 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மீண்டும் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்டு முதல் வாரத்தில்...
அதனால் மூத்த மந்திரிகளுக்கு இப்போதே பீதி அடைந்துள்ளனர். பசவராஜ் பொம்மை டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகம் திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. அவர் பெங்களூரு வந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் வருகிற ஆகஸ்டு முதல் வாரத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற 2-ந் தேதி அல்லது 4-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு போர்க்கொடி தூக்கும் எம்.எல்.ஏ.க்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எவ்வாறு சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பசவராஜ் பொம்மையுடன் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முருகேஷ் நிரானி, எச்.நாகேஷ், ரேணுகாச்சார்யா உள்பட பலர் நேற்று காலையில் பசவராஜ் பொம்மையை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது மந்திரிசபை விரிவாக்கத்தின்போது தங்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த எச்.நாகேஷ், "நான் கடினமான நேரத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருந்தேன். அதனால் எனக்கும் மந்திரி பதவி வழங்குமாறு கேட்டேன். அவர் சாதனமாக பதிலை கூறியுள்ளார். அதனால் எனக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.