மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க கோரி கவர்னரிடம் குமாரசாமி கடிதம்
ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க கோரி கவர்னரிடம் குமாரசாமி கடிதம் வழங்கினார்.
பெங்களூரு:
மேகதாது திட்டம்
கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.9,000 கோடியில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணையை கட்டியே தீருவோம் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறி வந்தார். இப்போது புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், புதிய அணையை திட்டமிட்டப்படி கட்டுவோம் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த மேகதாது திட்ட விஷயத்தில் கர்நாடகம், தமிழ்நாடு அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜ்பவனுக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் இருந்து ஊர்வலமாக ராஜ்பவனுக்கு சென்றனர். பிறகு அங்கு கவர்னர் கெலாட்டை நேரில் சந்தித்து பேசிய குமாரசாமி மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் வழங்கினார். இந்த சந்திப்புக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கவர்னர் மாளிகைக்கு கால்நடையாக...
மேகதாது, மகதாயி, கிருஷ்ணா மேல் அணை திட்டத்தில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டு வருகிறது. அதனால் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விதான சவுதாவில் இருந்து கவர்னர் மாளிகைக்கு கால்நடையாக வந்தோம். அங்கு கவர்னர் கெலாட்டை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினோம். மகதாயி விஷயத்தில் நடுவர் மன்றம் நீர் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், மத்திய அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை.
மேகதாது திட்ட விஷயத்தில் மத்திய அரசு சில நேரங்களில் சாதகமாகவும், தமிழ்நாடு பிரதிநிதிகள் சந்தித்த பிறகு வேறு மாதிரியாகவும் கருத்துகளை தெரிவிக்கிறது. மேகதாது விஷயத்தில் மத்திய அரசு விளையாடுகிறது. அதனால் கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளோம். நாங்கள் இந்த 3 நீர்ப்பாசன திட்டங்கள் விஷயத்தில் ஜனாதிபதி தலையிடுமாறு கேட்டுள்ளோம்.
நீர்ப்பாசன திட்டங்கள்
இதற்கு மத்திய அரசு எவ்வாறு பதிலளிக்கிறதோ அதன் அடிப்படையில் நாங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம். கடந்த 3 ஆண்டுகளாக அதிக மழை பெய்து, தண்ணீர் கடலில் போய் கலக்கிறது. ஆனால் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரையே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தேவேகவுடா பிரதமராக இருந்தபோது நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது.
புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ஜனதா பரிவாரை சேர்ந்தவர். நல்ல அனுபவம் உள்ளவர். அவர் எனது நண்பர். அவர் நன்றாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். எங்கள் கட்சி அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும். கடந்த 2 ஆண்டுகளில் எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. மத்திய அரசு சரியான அளவில் நிதி உதவி வழங்கவில்லை.
நெருக்கடி புரிகிறது
கர்நாடக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி. இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். இதன் மூலம் புதிய முதல்-மந்திரிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவருக்கு இருக்கும் நெருக்கடி எனக்கு புரிகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.