முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தில் மோதிய முன்னாள் மந்திரியின் கார்

தார்வாரில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் பாதுகாப்பு வாகனத்தின் மீது முன்னாள் மந்திரி சிவராம் ஹெப்பாரின் கார் மோதியது. இதில் அந்த காரில் பயணித்து வந்த 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-07-29 20:27 GMT
உப்பள்ளி:

கார் மோதியது

  கர்நாடக புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று உத்தர கன்னடா மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட வந்தார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சென்றார். முன்னதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அவருடன் முன்னாள் மந்திரி சிவராம் ஹெப்பார் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் காரில் சென்றனர்.

  முதல்-மந்திரியின் காரை பின்தொடர்ந்து சிவராம் ஹெப்பாருக்கு சொந்தமான காரும் சென்றது. அவர்கள் கோகுல் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது சிவராம் ஹெப்பாருக்கு சொந்தமான கார், முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் அந்த காரின் முன்பக்கம் சேதம் அடைந்தது.

4 பேர் காயம்

  இதில் அந்த காரில் இருந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர். சிவராம் ஹெப்பார், முதல்-மந்திரியின் காரில் இருந்ததால் அவர் காயமின்றி தப்பினார். முன்னதாக உப்பள்ளிக்கு வந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குசுமாவதி எம்.எல்.ஏ. பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும் செய்திகள்