தொழிலாளி கொலையில் கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம்
நெல்லை அருகே தொழிலாளி கொலையில் கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இட்டமொழி:
நெல்லை அருகே தொழிலாளி கொலையில் கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொழிலாளி கொலை
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிபட்டி சந்தை தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 36). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சுடலை (47) என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது சுடலை மதுபாட்டிலை கேட்டு தகராறு செய்த ராமரை கிணற்றில் தள்ளியுள்ளார்.
இதில் ராமர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுதொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுடலையை கைது செய்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
போலீசாரிடம் சுடலை பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும், ராமரும் உறவினர்கள். நாங்கள் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். எங்கள் 2 பேருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. நாங்கள் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்துவோம். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மாலையில் 2 பேரும் மதுபாட்டில்களை வாங்கி வந்து முனைஞ்சிபட்டி சந்தை பேச்சியம்மன் கோவில் கிணறு அருகே அமர்ந்து மது அருந்தினோம்.
அப்போது எனக்கு மதுபோதை அதிகமாக ஏறியது. ஆனாலும் மேலும் குடிப்பதற்காக, ராமர் வைத்திருந்த மதுபாட்டிலை கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்தார். இதனால் அவரிடம் வாக்குவாதம் செய்தேன். மதுபாட்டிலை அவரிடம் இருந்து பிடுங்க முயன்றேன்.
கிணற்றில் தூக்கி போட்டேன்
ஆனால் ராமர் மதுபாட்டிலை தர மறுத்து பிடிவாதம் செய்ததால் எனக்கு கோபம் தலைக்கேறியது. அப்போது ராமர் எழுந்து கிணற்று சுவர் மீது ஓரமாக அமர்ந்தார். நான் ஆத்திரத்தில் அவரது இரண்டு கால்களையும் பிடித்து அவரை கிணற்றுக்குள் தூக்கி போட்டேன். இதில் அவர் இறந்துவிட்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.