ஏனாமில் கிராம உதவியாளர் மதுபாட்டிலால் குத்திக்கொலை

ஏனாமில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில், கிராம உதவியாளர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-07-29 18:52 GMT
புதுச்சேரி, ஜூலை.30-
ஏனாமில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில், கிராம உதவியாளர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். 
மதுக்கடையில் தகராறு
ஆந்திர மாநில எல்லையில் புதுவையின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. அங்குள்ள ஒரு மதுக்கடையில் ஆந்திராவை சேர்ந்த லங்கா ராஜபாபு (வயது 23), அவரது நண்பர் காசி சீனு ஆகியோர் நேற்று மதுகுடிக்க வந்தனர். 
பின்னர் அவர்கள் மதுக்கடையில் பீர்பாட்டில்களை வாங்கி குடித்தனர். அவர்களுக்கு அருகே ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மதுவாங்கி குடித்துக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறியதும், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். 
குத்திக்கொலை
இதில் 5 பேர் கொண்ட கும்பல் லங்கா ராஜபாபு, காசி சீனு ஆகியோரை மதுபாட்டிலால் சரமாரியாக குத்தினார்கள். இதில் படுகாயமடைந்த லங்கா ராஜபாபு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த காசி சீனு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
5 பேருக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட லங்கா ராஜபாபு கிராம உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்