மன்னார்குடியில் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 73 டன் நெல் பறிமுதல் மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிக்கை

மன்னார்குடியில் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 73 டன் நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரி பறிமுதல் செய்தார்.

Update: 2021-07-29 17:00 GMT
மன்னார்குடி:-

மன்னார்குடியில் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 73 டன் நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரி பறிமுதல் செய்தார். 

வெளி மாவட்ட வணிகர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது 104 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் நேரடியாக விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். 
இந்த நிலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் விவசாயிகள் என்ற போர்வையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கள்ளத்தனமாக நெல்லை விற்பனை செய்வதாக தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நெல்- லாரிகள் பறிமுதல்

அதன்படி மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம், மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி ஆகியோர் மன்னார்குடி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது நெடுவாக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் எடைபார்க்கும் நிலையத்தின் அருகில் நெல் மூட்டைகளுடன் நின்ற 2 லாரிகளை சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதேபோல புதிய பை-பாஸ் சாலையில் ஒரு லாரியில் வெளிமாவட்டத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி நெல்மூட்டைகள் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இந்த 3 லாரிகளையும், அதில் இருந்த 73 டன் நெல்லையும் மாவட்ட வருவாய் அதிகாரி பறிமுதல் செய்தார். இதையடுத்து மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை வளாகத்தில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து வருவாய்துறையினர் அளித்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்