பழவேற்காட்டில் இறால் பண்ணை அமைக்கும் பணிக்காக கோட்டை அகழியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பழவேற்காட்டில் இறால்பண்ணை அமைக்கு பணிக்காக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஜெல்டிரியா கோட்டை அகழி சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. புராதான சின்னத்தைப் பாதுகாக்க தொல்பொருள் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-29 06:08 GMT
பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு கடலோரப் பகுதியானது சேர சோழ, பாண்டிய, விஜயநகர மற்றும் பல்வேறு அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவும் தலைநகரமாகவும் விளங்கியதாக கூறப்படுகிறது.

இங்கு முற்கால சோழ மன்னர்களால் ஆதி நாராயண பெருமாள் கோவில், சமயேஸ்வரர் கோவில், விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் கட்டப்பட்ட நிலையில், டச்சுகாரர்கள் பழவேற்காடு பகுதியை கைப்பற்றி அங்கு 11.5 ஏக்கர் பரப்பளவில் 1613-ம் ஆண்டு ஜெல்டிரியா கோட்டையை கட்டி ஆட்சி செய்து வந்ததாக வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெல்டிரியா கோட்டையை சுற்றி நான்கு புறங்களிலும் உயரமான மதில் சுவர் கட்டப்பட்டு அங்கு பாதுகாவலர்கள் பீரங்கிகளுடன் காவல் காப்பதற்காக வசதியாக ஆழமான அகழி உருவாக்கப்பட்டது. இதனையடுத்து பழவேற்காட்டில் வாணிப போட்டி காரணமாக புகுந்த ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களுடன் போர் நடத்தி வெற்றி கொண்ட போது, ஜெல்டிரியா கோட்டை சிதிலமடைந்ததாக தெரிகிறது.

இறால் பண்ணை

இதையடுத்து, சுதந்திரத்திற்குப் பின் மத்திய தொல்பொருள் துறையின் கீழ் ஜெல்டிரியா கோட்டை கொண்டுவரப்பட்டு, அங்குள்ள புராதன சின்னங்களை பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கும் ஜெல்டிரியா கோட்டையின் அகழி பகுதியை சேதப்படுத்தி அங்கு மிகப்பெரிய இறால் மீன் பண்ணை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

பணிகள் நிறைவடைந்த நிலையில், பழவேற்காட்டில் வரலாறு சிறப்புகளை எடுத்து கூறும் இடத்தில் புராதான சின்னம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு மீனவர்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே, அப்பகுதியில் கோட்டையை சேதப்படுத்தியவர்கள் மற்றும் இறால் பண்ணை அமைக்க ஒப்புதல் வழங்கிய அதிகாரிகள் மீது தொல்பொருள்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்