திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டம்

திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2021-07-28 21:38 GMT
திண்டுக்கல்: 

அ.தி.மு.க.வினர் போராட்டம் 
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் நேற்று உரிமை குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்களுடைய வீடு முன்பு கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தனது வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்சா, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதில் முன்னாள் அமைச்சர் உள்பட பலர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். மேலும் கருப்பு கொடியை ஏந்தியபடி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றும்படி கோஷமிட்டனர். 

பொய்யான வாக்குறுதிகள் 
முன்னதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய தி.மு.க., தற்போது மாணவர்களை தேர்வுக்கு படியுங்கள் என்று கூறுகிறது. பெட்ரோல் விலையில் ரூ.5 குறைப்பதாக தி.மு.க. கூறியது. ஆனால் பெட்ரோல் விலை ரூ.10 உயர்ந்து விட்டது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன் ரத்து, கூட்டுறவு வங்கிகளின் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க. இதுவரை நிறைவேற்றவில்லை.

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது. அனைத்து அரசு அலுவலகங்களில் தி.மு.க.வினர் சென்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 மாதங்களே ஆனநிலையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

நத்தம், வேம்பார்ட்டி 
இதேபோல் நத்தம் அருகே உள்ள வேம்பார்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நத்தம் எம்.எல்.ஏ.வுமான நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அதையடுத்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம் மக்களின் உரிமை குரல் முழக்க போராட்டமாக எதிரொலித்தது. இது தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுக்கும் எச்சரிக்கை மணி. இனியும் தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றாவிட்டால் மாநில அரசு ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டத்தை அ.தி.மு.க. நடத்தும் என்றார். 

நத்தத்தில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், நத்தம் ஒன்றிய குழு தலைவருமான கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர செயலாளர் சிவலிங்கம், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், நகர பேரவை செயலாளர் சேக்தாவூது, நகர அவைத் தலைவர் சேக் ஒலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

கோபால்பட்டி
சாணார்பட்டி தெற்கு, வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோபால்பட்டி, பாறைப்பட்டி, சாணார்பட்டி, கொசவபட்டி, கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமராஜ், வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைசெயலாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிகரன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்