கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்பு
பெங்களூரு ராஜ்பவனில் நடந்த கோலாகல விழாவில் கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பெங்களூரு:
எடியூரப்பா ராஜினாமா
கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா (வயது 78). இவர் வயது மூப்பு காரணமாக கடந்த 26-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அதாவது பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவின்பேரில் அவர் பதவி விலகினார். மக்கள் செல்வாக்குடன் திகழும் எடியூரப்பா பதவி விலகியது, பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜனதாவில் அவருக்கு இணையான ஒரு தலைவர் இல்லை என்றே கருதப்படுகிறது. தனது கம்பீரமான பேச்சால் மக்களை ஈர்க்கும் தன்மையை கொண்டவர் எடியூரப்பா.
பொதுக்கூட்டங்களில் எடியூரப்பாவின் பேச்சை கேட்பதற்காகவே மக்கள் கூடுவது உண்டு. மேலும் அவர் கர்நாடகத்தில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் பிரிவை சேர்ந்தவர். அதனால் அவரை ராஜினாமா செய்ய வைப்பது பா.ஜனதா மேலிடத்திற்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஆயினும் பா.ஜனதா மேலிடம் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததை அடுத்து எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். லிங்காயத் சமூகம் பா.ஜனதாவின் வாக்கு வங்கி என்று பரவலாக பேசப்படுகிறது. அந்த வாக்கு வங்கியை இழக்க பா.ஜனதா விரும்பவில்லை.
ஆட்சி அமைக்க அழைப்பு
இதையடுத்து கர்நாடக சட்டசபை பா.ஜனதா கட்சியின் கூட்டம் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 90-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கியமாக மேலிட பொறுப்பாளர் அருண்சிங், இணை பொறுப்பாளர் அருணா, மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி ஆகியோரும், பதவி விலகிய எடியூரப்பா, மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதில், எடியூரப்பா மந்திரிசபையில் சட்டம்-போலீஸ் துறை மந்திரியாக பணியாற்றிய பசவராஜ் பொம்மை, சட்டமன்ற கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து உடனடியாக அவர் கவர்னர் கெலாட்டை நேரில் சந்தித்து, தான் சட்டமன்ற பா.ஜனதா கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் தன்னை ஆட்சி மைக்க அழைக்க வேண்டும் என்றும் கோரி கடிதம் வழங்கினார். அதை ஏற்றுக்கொண்ட கவர்னர், ஆட்சி அமைக்கும்படி பசவராஜ் பொம்மைக்கு அழைப்பு விடுத்தார்.
23-வது முதல்-மந்திரியாக...
இந்த நிலையில் புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா நேற்று ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் மாநிலத்தின் 23-வது முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மைக்கு கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதே போல் கவர்னருக்கு புதிய முதல்-மந்திரியும் பூங்கொடுத்து கொடுத்தார். இந்த பதவி ஏற்பு விழா காலை 11 மணிக்கு தொடங்கி காலை 11.05 மணிக்கு நிறைவடைந்ததது. 5 நிமிடங்களில் இந்த விழா நிறைவடைந்தது. முதல்-மந்திரி ஒருவர் மட்டும் தான் பதவி ஏற்றார்.
எடியூரப்பாவிடம் காலில் விழுந்து ஆசி
இந்த விழாவில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன்ரெட்டி மற்றும் முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பசவராஜ் பொம்மையின் மனைவி, மகன்-மகள் மற்றும் குடும்பத்தினர் காலை 10.30 மணிக்கு ராஜ்பவனுக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்தனர். அவர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பதவி ஏற்பு விழா மேடைக்கு செல்லும் முன்பு எடியூரப்பாவின் காலில் விழுந்து பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார். பசவராஜ் பொம்மை பதவி ஏற்றபோது அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பி ஆரவரத்தில் ஈடுபட்டனர். பசவராஜ் பொம்மை, கடவுளின் பெயரில் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் தனது தோளில் காவி துண்டை போட்டிருந்தார்.
சிறப்பு பூஜை
எடியூரப்பா 4 முறை முதல்-மந்திரியாக பதவி ஏற்றபோது, தான் விவசாயிகளின் தோழன் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் பசுமை துண்டை தோளில் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா நிறைவடைந்த உடனேயே விதான சவுதாவில் முதல்-மந்திரி அலுவலகத்தில் எடியூரப்பா பெயர் பலகை அகற்றப்பட்டு, பசவராஜ் பொம்மையின் பெயர் பலகை பொருத்தப்பட்டது.
அந்த பலகைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் பசவராஜ் பொம்மை, நேராக விதான சவுதாவுக்கு வந்தார். அங்கு தனது அலுவலகத்தில் புரோகிதர் மூலம் பூஜை செய்து அறையில் உள்ள தனது நாற்காலியில் அமர்ந்தார். இதில் பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
பதவி ஏற்பு விழாவையொட்டி ராஜ்பவனை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எடியூரப்பா காலை 10.30 மணிக்கே ராஜ்பவனுக்கு முன்வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். அதே போல் புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் காலை 10.30 மணிக்கு ராஜ்பவனுக்கு வந்தார். முன்னதாக அவர் குமாரகிருபா விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்குள்ள கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
விழா முடிந்ததும் முக்கிய பிரமுகர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். ஆனால் பலரும் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை.
பதவி ஏற்பு விழா அகன்ற திரையில் ஒளிபரப்பு
பசவராஜ் பொம்மை புதிய முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரது பதவி ஏற்பு விழாவை நேரில் காண அவரது ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் ராஜ்பவனுக்கு வந்தனர். ஆனால் அனுமதி சீட்டு இருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனுமதி சீட்டு இல்லாதவர்கள் ராஜ்பவனுக்கு வெளியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களின் வசதிக்காக ராஜ்பவனுக்கு வெளியே அகன்ற திரை வைக்கப்பட்டு, அதில் பசவராஜ் பொம்மை பதவி ஏற்பு விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பதவி ஏற்பு விழாவை பார்த்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர். இதனால் ராஜ்பவன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
காவிரி நதி நீர் விவகாரத்தில் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்
கடந்த 2012-ம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. தண்ணீர் திறந்துவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அப்போது கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த ஜெகதீஷ்ஷெட்டரை அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு வந்து நேரில் சந்தித்து தண்ணீர் திறந்துவிடும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றிய பசவராஜ் பொம்மை அதில் கலந்துகொண்டு ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நேரத்தில் காவிரி நீர் பிரச்சினையை பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் கையாண்டதாக பேசப்பட்டது.
தந்தையை போல் தனயனும் முதல்-மந்திரி
கர்நாடகத்தில் தேவேகவுடா முதலில் முதல்-மந்திரி பதவியில் இருந்தார். அதன் பிறகு அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லிக்கு சென்று பிரதமராக பதவி ஏற்று பணியாற்றினார். அவரது வழியில் அவரது மகன் குமாரசாமியும் கர்நாடக முதல்-மந்திரி பதவி ஏற்று பணியாற்றினார்.
அவர்களை தொடர்ந்து தற்போது பசவராஜ்பொம்மை முதல்-மந்திரி பதவி ஏற்றுள்ளார். இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மை கர்நாடக முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இதன் மூலம் தந்தை வழியில் தனயனும் முதல்-மந்திரியாகி பசவராஜ் பொம்மை வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டில் 4 முறை நடந்த முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், அதிக தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் மூன்றே நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அதே மாதம் 23-ந் தேதி காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
அவர் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த நிலையில் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து எடியூரப்பா மீண்டும் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இப்போது பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். ஆகமொத்தம் கடந்த 3 ஆண்டுகளில் 4 முறை முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 3 முறை பதவி ஏற்பு விழா ராஜ்பவனிலும், ஒரு முறை விதான சவுதாவின் முன்பகுதியிலும் நடைபெற்றன. இந்த ஆட்சி காலம் முடிவடைய இன்னும் 22 மாதங்கள் உள்ளன.
சிக்காவி தொகுதியில் இருந்து 2-வது முதல்-மந்திரி
ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் புதிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை. அதற்கு முன்பு கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவருமான நிஜலிங்கப்பாவும் அதே சிக்காவி தொகுதியில் இருந்த தான் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தார். இதன் மூலம் சிக்காவி தொகுதியில் இருந்து தேர்வான 2-வது முதல்-மந்திரி என்ற பெயரை பசவராஜ் பொம்மை பெற்றுள்ளார்.