சேலத்தில் புகையிலை பொருட்கள் தயாரித்த குடோனுக்கு ‘சீல்’ உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலத்தில் புகையிலை பொருட்கள் தயாரித்த குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-07-28 20:31 GMT
சேலம்
புகையிலை பொருட்கள் தயாரிப்பு
சேலம் அன்னதானப்பட்டி சண்முகா நகர் சாமுண்டி முதலாவது தெருவை சேர்ந்தவர் பாலகார்த்திகேயன் (வயது 33). இவர் கடந்த சில ஆண்டுகளாக  வாசனை புகையிலை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் தயாரித்து விற்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலை அந்த குடோனுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது போலீசார் கெடுபிடியால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இங்கு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
சீல் வைப்பு
அதே நேரத்தில் அங்கிருந்து 120 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் அதை தயாரிக்க கூடிய மூலப்பொருட்களான பாக்கு சீவல் 37 கிலோ, மென்தால் 5 கிலோ, அரோமெடிக் ரசாயனம் 7 கிலோ, அரோமெடிக் திரவம் 15 லிட்டர், ஏலக்காய் 10 கிலோ ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். 
மேலும் அங்கிருந்து மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்தனர்.  அதைத்தொடர்ந்து அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறும் போது, பால கார்த்திகேயன் என்பவரது குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்காக அவர் மீது உணவு பாதுகாப்புத்துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். மேலும் இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்