விவசாயிகளுக்கு 11500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

விவசாயிகளுக்கு 11500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

Update: 2021-07-28 17:31 GMT
கோவை

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். 

அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (சிந்தாமணி), மற்றும் துடியலூர் கூட்டுறவு விவசாய ஸ்தாபனம் (டியூகாஸ்) ஆகிய இடங்களில் நேற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். 

பின்னர் அவர், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டு றவு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இதில், கூட்டு றவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர்கள் பாலமுருகன், இந்துமதி, மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், இணைப்பதிவாளர் பார்த்திபன், சிந்தாமணி சிறப்பு கூட்டுறவு அங்காடி மேலாண்மை இயக்குனர் சீனிவாசன், டியூகாஸ் மேலாண் இயக்குனர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது

ரூ.11,500 கோடி கடன் 

கொரோனா நிதி ஒரு சிலருக்கு மட்டும் இன்னும் கொடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டது‌. எனவே இந்த மாத இறுதிக்குள் அனைவருக் கும் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ரூ.9,500 கோடி பயிர்க்கடன் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.11,500 கோடி பயிர்க்கடன் வழங்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். 


ரேஷன் கடைகளில் தமிழகம் முழுவதும் விற்பனையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது. அந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

விதிமீறல்கள் குறித்து ஆய்வு 

கூட்டுறவு துறையின் மூலமாக செயல்படும் சுய உதவிகுழுக்களின் எண்ணிக்கையை 55 ஆயிரத்தில் இருத்து 1 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

படித்த இளைஞர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் எந்த தவறுக்கும் இடமளிக்காமல் வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.
ரேஷன் கார்டு இல்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை கிடைக்க உணவுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

 தமிழகம் முழுவதும் உள்ள 4,451 விவசாய கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அதில் உள்ள விவரங்கள் தெரிவிக்கப்படும்.

மாற்ற நடவடிக்கை 

விவசாயிகளுக்காக வேப்பம் புண்ணாக்கு தயாரிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது, தரமான விதைகள் கிடைக்கவும் நடவடிக் கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நீண்டகாலமாக ஒரே கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணியாளர்களை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் விதிமுறைப்படி நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்