டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
மதுரையில் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்தது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் ெசய்யப்பட்டுள்ளார்.
மதுரை, ஜூலை
மதுரையில் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்தது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் ெசய்யப்பட்டுள்ளார்.
டெய்லரிடம் பணம் பறிப்பு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திராநகரை சேர்ந்தவர் அர்ஷத் (வயது 32). இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் மதுைர வில்லாபுரத்தில் உள்ள பேக் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில், எனது உரிமையாளர் எனக்கு, இளையான்குடியில் சொந்தமாக பேக் கம்பெனி வைக்க உதவி செய்வதாக கூறினார். மேலும், அவர் மூலப்பொருள் வாங்குவதற்காக ரூ.4 லட்சம் கொடுத்தார்.
இதுபோல், என்னுடைய அண்ணன் மற்றும் உறவினரிடம் ரூ.6 லட்சம் கடனாக வாங்கினேன். இந்த பணத்துடன் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மேலும் ரூ.5 லட்சம் கடன் வாங்குவதற்காக கடந்த 5-ந்தேதி நாகமலைபுதுக்கோட்டை மாவு மில் பகுதியில் காத்திருந்தேன். அப்போது கடன் தருவதாக கூறிய நபர் பணத்தை எடுத்து விட்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.
இதற்கிடையே, அங்கு வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, நான் தொழில் நிமித்தமாக வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறித்து விட்டார். அதுபற்றி கேட்டபோது மறுநாள் போலீஸ் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள் என கூறிவிட்டு சென்றார். மறுநாள் சென்று கேட்டபோது “நீ கொடுத்த பையில் நோட்டு புத்தகம் தான் இருந்தது, பணம் இல்லை” என கூறினார். மீண்டும் வந்து பணம்கேட்டால், கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து விடுவேன் என மிரட்டினார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
விசாரணை
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி, கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலிக்கு, போலீ்ஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். விசாரணையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி பணம் பறித்தது தெரியவந்தது. மேலும், இதில் உக்கிரபாண்டியன், பால்பாண்டி, பாண்டியராஜா மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் கேட்டபோது, “தற்போது இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேவைப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.