கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 7½ லட்சத்தை கடந்தது

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 7½ லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2021-07-28 17:09 GMT
மதுரை, ஜூலை
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 7½ லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா 2-ம் அலையை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது தடுப்பூசி தான். மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் மக்கள் அதிக ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக வழங்கப்பட்டு வருகிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு மதுரையில் தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் அதனை 2-ம் கட்டமாக செலுத்த வேண்டியவர்கள் பலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி விரைவில் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
7½ லட்சம்
நேற்று மட்டும் மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 804 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி மதுரையில் இதுவரை 7 லட்சத்து 56 ஆயிரத்து 379 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70, அரசு மருத்துவமனைகளில் 650, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 35,110 என மொத்தம் 35 ஆயிரத்து 830 தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுபோல் மாவட்ட சுகாதார கிடங்கில் வேறு எதுவும் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்