தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி:
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், பழங்குடி சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தும் வரை இடஒதுக்கீடு தொடர்பான எந்தவிதமான அரசாணையும் வெளியிடக்கூடாது என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் இதுதொடர்பான கோரிக்கை மனு அளித்தனர்.