தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் அடித்துக்கொலை?; கணவர், மாமனாரிடம் போலீசார் விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து அவருடைய கணவர், மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-07-28 16:49 GMT
தேன்கனிக்கோட்டை:
கள்ளக்காதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடுமுச்சந்திரத்தை சேர்ந்தவர் சிக்க முனியப்பா. இவருடைய மகன் மாரேகவுடா. விவசாயி. இவருக்கும், பாரதி (வயது 28) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 
இந்தநிலையில் பாரதிக்கு அதே பகுதியை சேர்ந்த கிரிஷ் (28) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரேகவுடா தனது மனைவியிடம் கேட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
அடித்துக்கொலை?
இந்தநிலையில் பாரதி நேற்று வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதையடுத்து பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே இறந்து போன பாரதியின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில் மாரேகவுடாவும், இவருடைய தந்தை சிக்க முனியப்பாவும் சேர்ந்து பாரதியை அடித்துக்கொலை செய்ததாகவும், மேலும் உடலை தூக்கில் தொங்க விட்டு நாடகம் ஆடுவதாக சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தனர். 
பரபரப்பு
இதையடுத்து போலீசார் மாரேகவுடா, சிக்க முனியப்பா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பாரதி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்