ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மலர் நாற்றுகள் நடும் பணி தொடக்கம்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக 2 லட்சத்து 20 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
ஊட்டி
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனுக்காக 2 லட்சத்து 20 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
2-வது சீசன்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கோடை சீசன் நடைபெறாமல் உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுவது வழக்கம். இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூங்கா நர்சரியில் மலர் விதைகள் விதைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று 2-வது சீசனையொட்டி மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. இதனை தோட்டக்கலை துணை இயக்குனர் குருமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இன்கா மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, கேலண்டுலா, லூபின், ஜினியா, சப்னேரியா, பிளாக்ஸ், பிகோனியா, ஆஸ்டர், வெர்பினா, டேலியா உள்பட 150 ரகங்களை சேர்ந்த 2 லட்சத்து 20 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்கள் மற்றும் மரங்களை சுற்றிலும் நடவு செய்ய தயார்படுத்தப்பட்டு உள்ளது.
7 ஆயிரம் பூந்தொட்டிகள்
இதுதவிர 7 ஆயிரம் பூந்தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. கோடை சீசனையொட்டி நடவு செய்யப்பட்ட டேலியா, டெல்பீனியம், சால்வியா செடிகள் 2-வது சீசனுக்காக கவாத்து செய்யப்பட்டு இருக்கிறது.
பணியாளர்கள் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய புல்வெளி மைதானம் அருகே சாலையோரம் 2 ஆயிரம் அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. அலங்கார செடிகளை வெட்டி அழகுபடுத்துவது, புற்களை வெட்டுவது, செடிகளில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
2-வது சீசனையொட்டி நடவு செய்யப்படும் செடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் மலர்கள் பூக்க தொடங்கும். ஊரடங்கு தளர்வில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே, அதனை கண்டு ரசிக்க வாய்ப்பு ஏற்படும்.