திருச்செந்தூர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2.44 கோடி; 2¼ கிலோ தங்கமும் கிடைத்தது
திருச்செந்தூர் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2.44 கோடி கிடைத்துள்ளது. மேலும் 2¼ கிலோ தங்கமும் கிடைத்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூைல மாத உண்டியல் வருமானம் ரூ.2.44 கோடி கிடைத்துள்ளது.
உண்டியல் திறப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதத்திற்கான (ஜூலை) உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனரும், தக்கார் பிரதிநிதிமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் தூத்துக்குடி ரோஜாலி சுமதா, திருச்செந்தூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் முருகன், சிவலோநாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகளாக வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் ஆகியோர் கலந்து கொணடனர். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மட குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல்களை திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.2.44 கோடி வருமானம்
இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 28 லட்சத்து 47 ஆயிரத்து 635-ம், கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 758-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.30 ஆயிரத்து 105-ம், அன்னதான உண்டியலில் ரூ.13 லட்சத்து 43 ஆயிரத்து 866-ம், சிவன் கோவில் உண்டியலில் ரூ.40 ஆயிரத்து 53-ம், நாசரேத் கோவிலில் ரூ.4 ஆயிரத்து 938-ம், கிருஷ்ணாபுரம் கோவிலில் ரூ.7 ஆயிரத்து 907-ம், குலசேகரன்பட்டினம் அறம்வளர்ந்த நாயகி அம்மன் கோவிலில் ரூ.3 ஆயிரத்து 782-ம் என மொத்தம் ரூ.2 கோடியே 44 லட்சத்து 33 ஆயிரத்து 44 கிடைத்தது. மேலும், தங்கம் 2,255 கிராம், வெள்ளி 16,027 கிராம், அயல் நாட்டு கரன்சிகள் 46-ம் கிடைத்தன.
இக்கோவிலில் கடைசியாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உண்டியல்கள் எண்ணப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இம்மாதம் 5-ந் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது ஜூலை மாதம் உண்டியல்கள் எண்ணப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.