தஞ்சையில் பரிதாபம்: மோட்டார்சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் பட்டதாரி பலி
தஞ்சையில் பரிதாபம்: மோட்டார்சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் பட்டதாரி பலி
தஞ்சாவூர்,
தஞ்சை மோத்திரப்பசாவடியை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகன் விக்னேஸ்வரன் (வயது27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் உள்ள பட்டுக்கோட்டை மேம்பாலத்தின் அணுகுசாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீட்டின் சுவரில் மோதியது.
இதில் தலைகுப்புற கீழே விழுந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.