பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் - பொதுமக்கள் அச்சம்

பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2021-07-28 12:47 GMT
திருக்கடையூர்,

மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சியில் செட்டிமேடு கிராமத்தில் உள்ள நிலக்கடலை பயிரிடும் திடல்களில் மின் மோட்டார்களுக்காக தமிழ்நாடு மின் வாரியம் மூலம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பல்வேறு மணல் திடல்களில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் சாய்ந்து இருப்பதால் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் அடிக்கடி கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படும் நிலை இருந்து வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், செட்டிமேடு, நடுத்தெரு கிராமத்தில் பல்வேறு மணல் திடல்களில் மின் கம்பங்கள் சாய்ந்து மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விவசாய பணி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நிலக்கடலை பயிரிடும் திடல்களில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்களை சரி செய்து, மின் கம்பிகளை சீரமைத்தால்தான் இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி பணியை மேற்கொள்ள முடியும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் சீரமைப்பார்களா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்