வேதாரண்யத்தில் முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல்

வேதாரண்யத்தில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-28 11:19 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் மறைஞானநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல்(வயது 30). அதே ஊரை சேர்ந்்தவர் பிரபு(26). இவர்களுக்கும் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தை சேர்ந்த வெங்கடவரதன் என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தவர் வீட்டில் வெடி வெடித்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராகுல், பிரபு ஆகிய 2 பேரும் மறைஞானநல்லூர் மேலசத்திர கட்டளை பிள்ளையார் கோவில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த வெங்கடவரதன், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் பிரபுவை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பெயரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடவரதனை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்கியவரை கைது செய்யக்கோரி ராகுல் மற்றும் பிரபுவின் உறவினர்கள் திருவாசககுளம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்