மண்சரிவால் சாலைகள் சேதம்
குன்னூர், பந்தலூரில் மண்சரிவால் சாலைகள் சேதம் அடைந்தன. மடாமூலா காலனிக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஊட்டி
குன்னூர், பந்தலூரில் மண்சரிவால் சாலைகள் சேதம் அடைந்தன. மடாமூலா காலனிக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
நடைபாதைகள் உடைந்தது
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. குன்னூர் அருகே முட்டிநாடு ஈஸ்வர்நகர் கிராமத்தில் தொடர் மழையால் வீடுகளையொட்டி இருந்த நடைபாதை சாலை மண்சரிவால் உடைந்து பெயர்ந்து விழுந்தது. இதனால் வீடுகள் அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் மண் மேற்கொண்டு சரியாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உள்ளனர்.
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே புஞ்சைக்கொல்லியில் ஒரு வீட்டையொட்டி மண் சரிவு ஏற்பட்டது. மேலும் எருமாடு அருகே வெட்டுவாடி மடாமூலா ஆதிவாசி காலனிக்கு செல்லும் நடைபாதை சாலை தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு உடைந்து சேதம் அடைந்தது. இதனால் அங்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்து உள்ளனர். இது தவிர கைதக்கொல்லியில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பச்சை தேயிலை மகசூல்
கோத்தகிரி பகுதியிலும் நேற்று மதியம் முதல் மாலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடும் குளிர் நிலவியது. மழை மற்றும் கடும் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியதால் கோத்தகிரி மார்கெட்டிற்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் வராததால் மார்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பச்சைதேயிலை மகசூல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்தது
கூடலூர், தேவாலா, பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதற்கிடையில் புளியம்பாராவில் இருந்து காஞ்சிக்கொல்லி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே சிமெண்டு பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக தனியாக மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் தொடர் மழையால் அந்த மண் சாலையை வெள்ளம் அடித்து சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விவசாய பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. இதை அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர்.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-3.8, நடுவட்டம்-17, கிளன்மார்கன்-18, அவலாஞ்சி-13, அப்பர்பவானி-10, கூடலூர்-24, தேவாலா-31, செருமுள்ளி-16, பாடாந்தொரை-18, ஓவேலி-13, பந்தலூர்-30, சேரங்கோடு-14 என பதிவாகி உள்ளது.