மோட்டார்சைக்கிள்கள் மோதி தீப்பிடித்தது; 3 பேர் பலி

நெல்லை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதி தீப்பிடித்து 3 பேர் பலியானார்கள்.

Update: 2021-07-25 20:30 GMT
நெல்லை:
நெல்லை அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள்.

3 பேர் பலி

நெல்லை -மதுரை 4 வழிச்சாலையில் கங்கைகொண்டான் சோதனை சாவடியை கடந்து பெட்ரோல் பங்க் பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பற்றி எரிந்தது. இதில் ஒரு மோட்டார் சைக்கிளுடன் ஒரு வாலிபர் உடல் எரிந்து கரிக்கட்டையானார். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்து இறந்தனர்.
தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போலீஸ் ஜீப்பில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெயர் விவரம்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்தது கங்கைகொண்டான் கோவிலில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்த கண்ணன் (வயது 50), கங்கைகொண்டன் இரும்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த முத்துக்குமார் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் உடல் கருகி பலியானவர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
இந்த விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகில் உள்ள கீழகோட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி (24), இவருடைய மகன் கேசவன் (5) மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்