பணி முடிந்து ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீஸ் ஏட்டு கார் மோதி பலி முசிறி அருகே பரிதாபம்

முசிறி அருகே பணி முடிந்து ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீஸ் ஏட்டு கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-07-25 20:23 GMT
முசிறி, 
முசிறி அருகே பணி முடிந்து ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீஸ் ஏட்டு கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண் போலீஸ் ஏட்டு பலி

முசிறி கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சுபாஷினி (வயது 38). இவர் தனது கணவர் மோகன் மற்றும் குடும்பத்தினருடன் முசிறி அருகே பெரமூர் கிராமத்தில் வசித்து வந்தார். 

இந்தநிலையில் நேற்று இரவு வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது செவந்தலிங்கபுரம் அருகே எதிரே வந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சுபாஷினி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். 

பள்ளத்தில் கவிழ்ந்த கார்

விபத்துக்குள்ளான கார் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்து நின்றது. இதில் காரில் வந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷினியின் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் இறந்து போன சுபாஷினிக்கு சுதர்சன் (11) என்ற மகனும், நிரஞ்சனா (5) என்ற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்