போலீஸ்காரரிடம் செல்போன் திருடிய தொழிலாளி கைது
போலீஸ்காரரிடம் செல்போன் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் அழகியநம்பி (வயது 35). இவர் நேற்று பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் கைதி ஒருவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அழகிய நம்பி தனது இருக்கையில் செல்போனை வைத்து விட்டு, கழிவறைக்கு சென்றார். பின்னர் வெளியே வந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன், அந்த மர்ம நபரை பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்- இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் ஆகியோர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி அசோகன் (48) என்பதும், அவர் அழகிய நம்பியின் செல்போனை திருடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அசோகனை கைது செய்தனர்.