தூக்கில் மீனவர் பிணம்

அதிராம்பட்டினத்தில் தூக்கில் மீனவர் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

Update: 2021-07-25 20:06 GMT
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் தூக்கில் மீனவர் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். 
மீனவர் 
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர்  சுந்தர்ராஜ்(வயது58). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு ரவிசந்திரா(47) என்ற மனைவியும், அம்சவள்ளி(20) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுந்தர்ராஜ், கரையூர் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு அவரது படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்கும் போது சுந்தர்ராஜ் படகில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் இருந்தார். இந்தநிலையில் மாரிமுத்து, அவரது மகன் பெருமாள் ஆகியோர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு வந்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சுந்தர்ராஜ் பணம் ஏற்பாடு செய்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். பி்ன்னர் அவர் வீடு திரும்பவில்லை. 
தூக்கில் பிணம் 
இந்தநிலையில் கடந்த 23-ந்தேதி காலை வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சுந்தர்ராஜ் பிணமாக கிடந்தார். 
தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தர்ராஜ்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சாவில் சந்தேகம்
இதுகுறித்து சுந்தர்ராஜ் மனைவி ரவிசந்திரா அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்பது தெரியவில்லை. இதுபற்றி உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.   புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்