மீன்கள் வாங்க ஆர்வத்துடன் வந்த மக்கள்

ஆடி மாதத்திலும் இறைச்சி மீது மவுசு குறையாததால் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வத்துடன் கூடினர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-25 20:01 GMT
தஞ்சாவூர்:
ஆடி மாதத்திலும் இறைச்சி மீது மவுசு குறையாததால் மீன்கள் வாங்க மக்கள் ஆர்வத்துடன் கூடினர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.
மீன்கள் விற்பனை
கொரோனா தொற்று குறைந்து வருவதால் முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மீன் மார்க்கெட்டிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் தனித்தனியாக இயங்கும் இறைச்சி கடைகள், மீன் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை கீழவாசலில் உள்ள மீன்மார்க்கெட்டில் மக்கள் கூடுவதை தவிர்க்க மீன்கள் விற்பனை நடைபெறவில்லை. அதற்கு பதிலாக தென்கீழ் அலங்கம் முதல் வெள்ளை பிள்ளையார்கோவில் வரை அகழி கரையில் தற்காலிகமாக மீன் கடைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு மீன் விற்பனை நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல் மக்கள் கூட்டம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். தினமும் இறைச்சி கடைகள் திறந்து இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சி வாங்குவதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆடி மாதம் பிறந்துவிட்டதால் இறைச்சி மீது மவுசு குறையும் எனவும், இதனால் விற்பனையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமான ஞாயிற்றுக்கிழமையை போல் தஞ்சை மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள தற்காலிக மீன்கடைகள், பர்மாகாலனி மீன் கடைகளில் மக்கள் அதிகஅளவில் மீன்களை வாங்கி சென்றனர். அதேபோல் தஞ்சை கீழவஸ்தாசாவடியில் மீன்கள் மொத்த வியாபாரம் செய்யும் இடத்திலும் மீன்கள் சில்லறை வியாபாரமும் நடைபெற்றதால் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் கோழிக்கறி, ஆட்டிறைச்சி வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
ஆடி மாதத்தால் இறைச்சி விற்பனையில் பெரியஅளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, மீன்கள் மொத்த வியாபாரம் செய்யும் இடத்திலும் சில்லறை வியாபாரம் செய்வதால் மக்கள் நேரடியாக அங்கே சென்று மீன்கள் வாங்குகின்றனர். இதனால் கொஞ்சம் விற்பனை பாதிப்பே தவிர, ஆடி மாதத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் மீன்கள் விற்பனை நடைபெற்றது என்றனர்.
கொரோனா பரவல் நேரத்தில் ஏராளமானோர் மீன்கள் விற்பனையை புதிதாக தொடங்கி உள்ளனர். இதனால் ஆங்காங்கே மீன்கள் விற்பனை கடைகள் புதிதாக முளைத்துள்ளன. கொரோனா பரவல் அபாயம் நீங்காத நிலையில் பல இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாக இருந்தது. இந்தநிலையில் தென்கீழ்அலங்கம் பகுதியில் உள்ள தற்காலிக மீன்கள் விற்பனை கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்