விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தைப்புலிகள்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வேம்பையாபுரம், திருப்பதியாபுரம், செட்டிமேடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாய தொழிலையே நம்பி உள்ளனர். மேலும் இவர்கள் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இந்த கிராமங்களில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வரும் சிறுத்தைகள் புகுந்து கொட்டகையில் கட்டிப்போடப்பட்டு இருக்கும் ஆடு, கோழி போன்றவற்றை தூக்கி சென்று விடுகின்றன.
அட்டகாசம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு பாபநாசம் வனத்துறையினர் கூண்டு வைத்து 7 சிறுத்தைகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
இதன்பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஒரு ஆட்டை அடித்துக்கொன்றது. மற்றொரு ஆட்டை அடித்து தூக்கிச்சென்றது. இவ்வாறு தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் அந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் மட்டுமே சிறுத்தையை பார்த்து வந்தனர்.
ஓடையை தாண்டியது
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வேம்பையாபுரத்தின் மேல் பகுதியில் உள்ள ஒத்தப்பனை என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று அகன்ற ஓடையை தாண்டி வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது அங்கு சென்ற சில இளைஞர்கள் இதை பார்த்தனர்.
தண்ணீரின்றி கிடக்கும் அந்த ஓடையை சிறுத்தை தாண்டியபோது ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். பல அடி உயரத்துக்கு அந்த சிறுத்தை தாவிக்குதித்து சென்றது பார்த்தவர்களை பரவசப்படுத்தி உள்ளது.
கூண்டுவைத்து பிடிக்க கோரிக்கை
மதிய வேளையில் ஆட்டை பிடிப்பதற்காக ஊருக்குள் அந்த சிறுத்தை வந்திருக்கலாம் என்றும், பொதுமக்களை கண்டதும் பல அடி உயரத்துக்கு துள்ளிக்குதித்து ஓடையை தாண்டி தப்பிச்சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.