அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்; கடைக்குள் லாரி புகுந்தது
தோவாளை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதில், லாரி கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி,
தோவாளை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதில், லாரி கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
விபத்து
நெல்லை மாவட்டம் இருக்கன்துறையில் இருந்து ஜல்லிகளை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. தோவாளையை அடுத்த மயிலாடி விலக்கு பகுதியில் வந்த போது, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதை பார்த்ததும் வேகமாக வந்த டிப்பர் லாரியை டிரைவர் நிறுத்தியதாகவும், இதனால் அதன் பின்னால் சிமெண்டு ஏற்றி வந்த லாரி, அரசு பஸ் ஆகியவை அடுத்தடுத்து மோதின. இதில் டிப்பர் லாரி போலீஸ்காரர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது.
6 பேர் படுகாயம்
இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொருங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் மடிச்சல் அருகே ஈத்தவிளையை சேர்ந்த தியாகராஜன் (வயது 47) மற்றும் பயணிகள் இனயத்தை சேர்ந்த அமலன் (39), திருவனந்தபுரத்தை சேர்ந்த மார்க்கோஸ் (70), குளச்சலை சேர்ந்த மரிய ரென்சி (18), சகாயராணி (49), நவமி ஜெர்சி (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.