மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்: மனைவி தள்ளி விட்டதில் கீழே விழுந்த தொழிலாளி சாவு-போலீசார் கைது செய்து விசாரணை
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்து மனைவி தள்ளி விட்டதில் கீழே விழுந்த தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வெண்ணந்தூர்:
மதுபோதையில் தகராறு
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள வாய்க்கால் பட்டறை அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (55). இந்த தம்பதியின் மகள் புனிதா (17). தொழிலாளி பழனிசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர் குடித்து விட்டு வந்து, மதுபோதையில் அடிக்கடி வள்ளியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 22-ந் தேதி பழனிசாமி வேலைக்கு சென்று விட்டு, மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் வள்ளியம்மாளிடம் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கி உள்ளார்.
ஆஸ்பத்திரியில் பலி
இதனால் வலி தாங்க முடியாத வள்ளியம்மாள் ஆத்திரமடைந்து கணவரை தடுத்து, தள்ளினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதனால் பதறிபோன அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனது தந்தை இறந்தது குறித்து புனிதா வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மனைவி கைது
அதன்பேரில் வெண்ணந்தூர் போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, அங்கிருந்த வள்ளியம்மாள், புனிதாவிடம் விசாரித்தனர். அதில், பழனிசாமி மதுபோதையில் வள்ளியம்மாளை தாக்கியதும், அவர் ஆத்திரமடைந்து தள்ளிவிட்டதால் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வள்ளியம்மாளை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.