34 பவுன் நகைகள்- 2 கிலோ வெள்ளி கொள்ளை
குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீன கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீன கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
உடல் நலக்குறைவு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது62).இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார். இவரது தாய் திருக்கோடிக்காவல் கிராமத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் ராஜேந்திரன் தனது தாயை பார்க்க நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு திருக்கோடி காவலுக்கு சென்றார்.
நேற்று அதிகாலை மீண்டும் அவர் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் வாசல் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குத்தாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
நகை- பணம் கொள்ளை
விசாரணையில் மர்ம நபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து கிரில்கேட் பூட்டு மற்றும், கதவை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டின் இரு அறைகளிலும் உள்ள பீரோவை உடைத்து அவைகளில் இருந்த
ஆரம், டாலர், நெக்லஸ், செயின், பிரேஸ்லெட், மோதிரம், தோடு உள்ளிட்ட 34 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3ஆயிரம், 3 ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.