போலீஸ் ஏட்டு தற்கொலை
வேடசந்தூரில் போலீஸ் ஏட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோகுல் நகரை சேர்ந்தவர் ரத்தினகிரி (வயது 51). இவர், சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ரத்தினகிரி வீட்டின் ஒரு அறையில் தூங்க சென்றார். காலையில் வெகுநேரமாகியும் அவருடைய அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்தது. கதவை தட்டியபோதும் அவர் திறக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரத்தினகிரி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் ரத்தினகிரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.