திருச்சியில் பரபரப்பு: ஓடும் கார் திடீரென தீப்பிடித்தது

திருச்சியில் ஓடும் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-25 02:27 GMT
திருச்சியில் பரபரப்பு:
ஓடும் கார் திடீரென தீப்பிடித்தது
திருச்சி, 
திருச்சியில் ஓடும் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழைய கார் விற்பனை

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள மேலமுத்துடையான்பட்டி வெள்ளனூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நவநீதன் (வயது 29). இவர், தனக்கு சொந்தமான காரை மறு விற்பனை (செகண்ட் சேல்ஸ்) செய்ய விரும்பினார்.

அதற்காக திருச்சி உறையூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அண்ணாமலை நகரில் உள்ள பழைய கார் விற்பனை செய்யும் டீலர் அலுவலகத்திற்கு நேற்று காரை நவநீதன் ஓட்டி வந்தார். அப்போது அங்கு காரை வாங்க சிலர் வந்தனர். 

தீப்பிடித்து எரிந்து நாசம்

நவநீதன் கொண்டு வந்த கார், நல்லமுறையில் ஓடுகிறதா? என பரிசோதிக்க விரும்பினர். அதைத்தொடர்ந்து காரை, சோதனை ஓட்டமாக (டெஸ்ட் டிரைவ்) கொண்டு சென்றனர். நேற்று பிற்பகல் 2 மணியளவில் திருச்சி-கரூர் பை-பாஸ் சாலையில் ரெயில்வே பாலம் அருகில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென கார் தீப்பிடித்தது. 

உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கி ஓட்டம் பிடித்தனர். திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், வாகனத்தில் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுமையாக எரிந்து நாசமானது. 

பரபரப்பு

இந்த திடீர் தீவிபத்து காரணமாக, கரூர் பைபாஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேட்டரியில் இருந்து சென்ற மின்வயர்கள் உராய்வால் தீப்பிடித்ததாக தெரிகிறது. 

மேலும் செய்திகள்