திருவள்ளூர் அருகே, ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதல்; பெண் சாவு - மாமியார், டிரைவர் படுகாயம்

திருவள்ளூர் அருகே ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். மாமியார், டிரைவர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-07-25 01:55 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஆற்காடு குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சத்யா (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று தனது ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி அடுத்த கூடல் வாடியை சேர்ந்த நிரோஷா (35) மற்றும் அவரது மாமியார் லட்சுமி (56) ஆகிய பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெருமந்தூர் சாலையில் அந்த ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் அந்த ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த நிரோஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் சத்யா, அவரது மாமியார் லட்சுமி, ஆகியோரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்