நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி
நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். விவசாயியான இவர் ஆடுகள், பசுக்கள் ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இதில் சினையாக இருந்த ஒரு ஆடு நேற்று முன்தினம் 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி வழக்கத்துக்கு மாறாக விசித்திர உருவத்துடன் நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் இருந்தது. இதனால் சிவகுருநாதன் குடும்பத்தினர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். பின்னர் குட்டி எழுந்து நடமாட தொடங்கியதையடுத்து சகஜ நிலைக்கு திரும்பினர். ஒற்றைக்கண்ணுடன் ஆட்டுக்குட்டி பிறந்த தகவல் அப்பகுதி மக்களிடத்தில் காட்டுத்தீ போல் பரவ தொடங்கியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும் ஆடி வெள்ளி, பவுர்ணமி இணைந்த நாளில் நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் சுக்கிரபகவான் போல பிறந்த ஆட்டுக்குட்டியால் கிராமத்திற்கு நல்லது நடக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஒற்றைக்கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி குறித்து அரசு கால்நடை மருத்துவர் இளையராஜா கூறுகையில், 10 ஆயிரம் ஆடுகளில் ஒரு ஆடு இதுபோன்ற குறைபாடுடன் பிறப்பது எப்போதாவது நடக்கும். இது ஒருவகையான "திடீர் மாற்றம்" நிகழ்வு. இந்தக் குறைபாட்டின் பெயர் "அனாப்தால்மியா" என்பதாகும். ஒவ்வொரு உயிரும் கருவாக உருவாகும்போது முதலில் மூளை உருவாகும். மூளை உருவாகும்போது வலது, இடது என இரண்டாக பிரியும்போது மட்டுமே 2 கண்கள் உருவாகும். இடது, வலது என்று மூளை பிரியாத பட்சத்தில் ஒற்றை மூளை மட்டுமே உருவாகும். அதனால் ஒற்றை கண் மட்டுமே உருவாகும். இந்த ஆட்டுக்குட்டியின் வாழ்நாள் மிகவும் குறைவாக இருக்கும், என்று தெரிவித்தார்.