கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. சந்தையில் ஒரு சேவல் ரூ.3 ஆயிரத்து 500க்கு விற்பனை ஆனது.
எடப்பாடி
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. சந்தையில் ஒரு சேவல் ரூ.3 ஆயிரத்து 500க்கு விற்பனை ஆனது.
சனிக்கிழமை சந்தை
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் சனிக்கிழமை சந்தை நேற்று கூடியது. சந்தைக்கு எடப்பாடி பகுதியில் இருந்து சுமார் 6 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் சந்தைக்கு வந்து இருந்தனர். ஆடி மாதத்தில் கோவில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் ஆடு, கோழிகள் விற்பனை களை கட்டியது.
10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 900 வரையிலும், 12 கிலோ எடையுள்ள ஆடு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 700 வரையும் விற்கப்பட்டது. இதில் வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்கப்பட்டது.
சேவல் ரூ.3,500 க்கு விற்பனை
இதேபோல் 2 ஆயிரத்து 200 சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு தரத்திற்கு ஏற்ப ரூ.700 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் 10 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற பகுதி வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனர். சந்தையில் மொத்தமாக ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.