மாநகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும்; அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மாநகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மாநகராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், பொருட்காட்சி திடல் வணிக வளாகம், அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரே அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையையும், மாநகராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தையும் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.895 கோடியில் பணிகள்
நெல்லை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.895 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 15 பணிகள் ரூ.161 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் 56 பணிகள் ரூ.698 கோடியில் நடைபெற்று வருகிறது. இதில் 15 பணிகள் 10 முதல் 15 நாட்களுக்குள் முடிந்து விடும். அதை தவிர 5 பணிகள் ரூ.37 கோடியில் நடைபெற உள்ளது.
ரூ.12.64 கோடியில் விளையாட்டு அரங்குகள் கட்டப்பட உள்ளது. நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அனைத்தும் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.
பாதாள சாக்கடை திட்டம்
நெல்லை மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் 480 கிலோ மீட்டர் தூரம் நடைபெற வேண்டிய பணிகளில் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பணிகள் செய்துள்ளனர். விடுபட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ.745 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் ஒரு பகுதி திட்டம் 60 சதவீதம் முடிந்து விட்டது. பாளையங்கோட்டை பகுதிக்கான திட்டத்தில் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்று உள்ளது. இந்த பணிகளை முழுமையாக முடிக்க அனைத்து அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
கூட்டு குடிநீர் திட்டம்
மாநகராட்சி பகுதியில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். தற்போது மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் வருகிறது. புதிதாக ரூ.230 கோடி செலவில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 95 சதவீத பணிகள் முடிந்து விட்டது. வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.
கிராமப்புறங்களில் மத்திய அரசின் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது போன்று நகர்ப்புறத்திலும் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. துணை மாதிரி நகரங்கள் குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
வார்டு மறுசீரமைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும். நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை மாறுபட்டு இருக்கிறது. அதை சீர் செய்யவும், மாநகராட்சியை விரிவுபடுத்தவும், அருகில் உள்ள கிராமங்கள், நகரங்களை மாநகராட்சியுடன் இணைக்கவும், புதிய நகராட்சி, பேரூராட்சிகளை உருவாக்குவதும் தொடர்பான பணிகள் தொடங்கும்.
2018-ம் ஆண்டு மாநகராட்சி வார்டுகளை சீரமைப்பு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளனர். அதன் பிறகு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. பெண்கள், சமுதாய இடஒதுக்கீட்டை மாற்றி உள்ளனர். அதையெல்லாம் சரி செய்து, புதிய மாநகராட்சி அறிவித்தபடி இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் சரியாக பிரித்து தேர்தலை நடத்துவோம். வார்டு மறுசீரமைப்பு செய்து, இடஒதுக்கீட்டை சரியாக ஏற்படுத்திய பிறகே தேர்தல் நடத்தப்படும். வருகிற செப்டம்பர் 15-ந் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதன் பிறகு நகர்ப்புற தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு கூட்டம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறை அலுவலர்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகளை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிதண்ணீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடைப்பு ஏற்பட்டால் உடனே அந்த பணிகளை சரிசெய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான திட்டங்களை இந்த அரசு விரைவாக செயல்படுத்தி வருகிறது. இதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், பழனி நாடார், நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன், டாக்டர் சதன் திருமலைக்குமார், ராஜா, சண்முகையா, மார்க்கண்டேயன், ராஜேஷ் குமார், காந்தி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ், பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, கலெக்டர்கள் விஷ்ணு, செந்தில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மனு கொடுத்தனர்
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் நேரு காரில் ஏறி வெளியே வந்தபோது கலெக்டர் அலுவலக வாசலில் நின்ற, நெல்லை டவுன் கிருஷ்ணபேரி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், நெல்லை மாநகராட்சி டவுன் கிருஷ்ணபேரி கிராமத்தில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். எங்களை குடிசை மாற்று வாரியத்தினர் அந்த இடத்தை விட்டு காலி செய்ய கூறுகிறார்கள். நாங்களும் தொடர்ந்து அந்த இடத்தில் குடியிருக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் நேரு, அந்த மனுவை பாளையங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலத்திடம் வழங்கி கலெக்டரிடம் வழங்குமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களை சப்-இன்ஸ்பெக்டர் கலெக்டரிடம் அழைத்து சென்று மனு கொடுக்க செய்தார்.