எலச்சிபாளையம் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது
எலச்சிபாளையம் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
எலச்சிபாளையம்:
ரேஷன் அரிசி கடத்தல்
எலச்சிபாளையம் அருகே கொன்னையார்-பருத்திப்பள்ளி சாலையில் தனியார் கல் அரவை கிரசர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதபிறவி தலைமையில் நாமக்கல் மாவட்ட குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் சரக்கு ஆட்டோவில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கொல்லிமலையை சேர்ந்த மனோஜ் (வயது 22) என்பதும், திருச்செங்கோட்டில் இருந்து கொல்லிமலைக்கு 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் மனோஜை கைது செய்தனர். மேலும், 2 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் பார்வையிட்டு, மனோஜிடம் விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை விற்பனை செய்வதோ, பதுக்குவதோ, கடத்துவதோ சட்டப்படி குற்றம் ஆகும். இந்த குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.