அரசு பள்ளியில் கூடுதல் கட்டிட வசதி

புதுக்கோட்டையில் அதிக மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட அரசு பள்ளியில் கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தப்படுமா? என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-07-24 17:26 GMT
புதுக்கோட்டை, ஜூலை.25-
புதுக்கோட்டையில் அதிக மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட அரசு பள்ளியில் கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்தப்படுமா? என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான அரசு பள்ளிகள் பல உள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டை நகரில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் தொடக்கப்பள்ளி பெயர் பெற்றதாகும். கடந்த 1958-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த பள்ளியில் தற்போது மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கூடியபடி உள்ளது. இந்த கல்வி ஆண்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 293 மாணவ-மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர். 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மொத்த மாணவர் எண்ணிக்கை தற்போது 774 ஆக உள்ளது. கடந்த கல்வியாண்டில் மொத்த மாணவர்எண்ணிக்கை 516 ஆகவும், அதற்கு முன்பாக 339 ஆகவும் இருந்தது. பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்,மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த பயிற்சி உள்ளிட்டவைகளால் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் தனது மகள், மகனை இந்த பள்ளியிலேயே சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இட வசதி இல்லை
நகரின் முக்கிய பகுதியில் இந்த பள்ளி இருப்பதாலும் பெற்றோரும் தங்களது வசதிக்கேற்ப இந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்கின்றனர். இந்த நிலையில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப பள்ளியில் இட வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்த நிலையில் பள்ளிகள்திறக்கப்பட்டால் மாணவர்கள் அமர வகுப்பறைகள் போதுமானதாக இல்லாதது பெரும் குறையாக உள்ளது. ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகள் தேவைப்படுவதாக பள்ளி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
மேலும் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதேபோல அந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வசதியாக ஆசிரியர்களும் தேவைப்படுகிறார்கள். தற்போது தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 9 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் உடற்கல்வி ஆசிரியர் தனியாக நியமிக்கப்பட வேண்டும்.
விளையாட்டு மைதானம்
பள்ளியில் மாணவர்கள் விளையாட வசதியாக மைதானம் எதுவும் இல்லை. பள்ளியின் அருகே உள்ள நகர்மன்ற வளாகத்தை தான் விளையாட்டு மைதானமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். பள்ளியின் வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு அதில் மைதானம் ஏற்படுத்தலாம். மாணவர்களின் வசதிக்காக அரசு உயர் தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்