கூடலூர் பகுதியில் நெல் சாகுபடி மும்முரம்
கூடலூர் பகுதியில் நெல் சாகுபடி மும்முரம்
கூடலூர்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வழக்கமாக பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் 1 மாதம் தாமதமாக தென்மேற்கு பருவமழை கூடலூர் பகுதியில் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இஞ்சி விவசாயம் களை கட்டியுள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் கூடலூர் பகுதியில் நெல் சாகுபடி தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நிலங்களை உழுது தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து பருவமழையை சாதகமாக பயன்படுத்தி விதை நெல்லை வயலில் தூவினர். தற்போது நெல் நாற்றுகள் நன்கு முளைத்து நடவு செய்வதற்கு தயாராகி வருகிறது.
வருகிற ஆடிப்பெருக்கு நாளில் இருந்து நெல் நாற்றுகளை வயலில் நடவு செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கூடலூர் கம்மாத்தி, தொரப்பள்ளி, அள்ளூர் வயல், குனில்வயல், பாடந்தொரை, முதுமலை ஊராட்சி உள்பட பல இடங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் பாரம்பரிய நாட்டு ரகமான கந்தகசால், மரநெல், அடுக்கை உள்ளிட்ட நெல் பயிரிட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- இப்பகுதி மண்ணின் தன்மைக்கு ஏற்ப விளையக்கூடிய பாரம்பரிய நாட்டு ரக நெற்பயிர்கள் பல தலைமுறைகளாக பயிரிடப்பட்டு வருகிறது. பருவமழை நீரை கொண்டு விவசாயம் செய்வதால் நாட்டு ரகங்கள் நன்கு வளர்கிறது.
மேலும் ரசாயன உரங்கள் தேவைப்படுவது இல்லை. இதனால் அரிசியின் தரம் மேம்படுகிறது. விளைச்சலுக்கு பிறகு கேரளாவை சேர்ந்த மொத்த வியாபாரிகள் நெல்லை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.